அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கமலி சுவாமி தரிசனம்
அவிநாசி: ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழகத்தின் கால்நடைத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக எம்.எல்.ஏ., கமலி சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவிநாசி சட்டமன்ற தனி தொகுதியில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த த வெக வேட்பாளர் கமலி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை விரிவாக்கத்தில் கால்நடை துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. கால்நடைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது சொந்த தொகுதிக்கு வந்த அமைச்சர் கமலி இன்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் தீபஸ்தம்பம் அருகே உள்ள வீரபத்திரர் சன்னதி முன்பு எள் மற்றும் நெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை வழங்கி மாலை அணிவித்தனர். பின்னர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் அமைச்சர் கமலிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, மூலவர்,அம்மன், சுப்ரமணியர் மற்றும் நடராஜர் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். அமைச்சர் கமலிக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில் நினைவு பரிசாக சுவாமி அம்பாள் கூடிய புகைப்படம் அளித்தனர். பின்னர் அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், பல்லடம் எம்எல்ஏ ராம்குமார், ஒன்றிய செயலாளர் ஆனந்த், ஷாபி, ராமசாமி, சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.