உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடமையினைச் சரிவர செய்ய வழிகாட்டும் பகவத் கீதை’ நேபாளத்தில் சிருங்கேரி சுவாமிகள் அருளுரை

கடமையினைச் சரிவர செய்ய வழிகாட்டும் பகவத் கீதை’ நேபாளத்தில் சிருங்கேரி சுவாமிகள் அருளுரை

நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம், திங்கட்கிழமை நேபாள் காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். வேத பண்டிதர்கள் மற்றும் காவல் துறை இசைக்குழுவினரின் மரியாதையான வரவேற்பைத் தொடர்ந்து, காவல் துறை தலைமை அதிகாரி தன்பகதூர் கர்கி பாத பூஜை செய்தார். வளாகத்தில் கற்பக மரக்கன்றை நட்ட பின் ஆசார்யார் அரங்கிற்குச் சென்றார்.

வரவேற்புரை அளித்த பகதூர் கற்கி தமது உரையில் நேபால் போலீசின் அடிப்படை ‘உண்மை சேவை மற்றும் பாதுகாப்பு’ எனவும், இவைகள் சனாதன தர்மத்தின் அடிப்படையில் அமைந்துள்ள கோட்பாடுகள் எனவும் ஸ்ரீ சன்னிதானத்தின் நேபாள் விஜய யாத்திரையும், அருளுரைகளும், மக்களிடையே தார்மீக எண்ணங்களை வலுப்படுத்தவதாக அமைந்து இருப்பதற்காக ஜகத்குருவிற்கு நன்றியைத் தெரிவித்தார்.

அரங்கத்தில் குழுமியிருந்த 400 உயர் அதிகாரிகள் மற்றும் ஆன்லைனில் இணைந்திருந்த 30,000 காவல்துறையினரிடையே ஜகத்குரு அருளுரை வழங்கினார். காவல்துறை பணி என்பது கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கை தேவையுடையது என்றும், காவல் அதிகாரிகள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

விஷ்ணு ரூபமான சாலிகிராமம் மற்றும் சிவ ரூபமான ருத்ராக்ஷம் விளையும் நேபாள தேசம், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தெய்வீகமான  நாடு என்று அவர் போற்றினார். பசுபதி நாத், முக்தி நாத் ஆகிய க்ஷேத்திரங்கள் காசிக்கு நிகரானவை என்றார்.

மனிதப் பிறவியின் பயன் இறைத் தத்துவத்தைப் புரிந்துகொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதே ஆகும். இதற்கு உபநிடதங்களும் பகவத் கீதையும் வழிகாட்டுகின்றன. போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மனப் போராட்டத்தையும், கீதா உபதேசத்திற்குப் பின் அவர் தெளிவு பெற்று கடமையாற்றியதையும் ஜகத்குரு சுட்டிக்காட்டினார். எனவே, பகவத் கீதை ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் சரிவரச் செய்ய வழிகாட்டும் உலகமறையாகும் என்று அவர் விளக்கினார்.

அனைவருக்கும் பொருந்தும் அத்வைத கொள்கையினை நிலை நாட்டிய ஸ்ரீ ஆதி சங்கராசார்யார் ஜகத்குரு என அழைக்கப்படுகிறார். அதே போல் அவர் வழிவந்த நான்கு ஆம்னாய பீடங்களின் ஆசார்யார்களும் ஜகத்குரு என்றே அழைக்கப்படுகின்றனர். 

ஸ்ரீ மஹா சிவபுராணம், பகவான் பரமேஸ்வரனை ‘நாமாஷ்டகம்’ எனும் 8 நாமாக்களில் குறிப்பிடுகிறது. அவையாவன 

சிவ - என்றும் மங்களமானவர்

மஹேஸ்வர - இருமைகளுக்கு காரணமான மாயையினை கட்டுப்படுத்துபவர்

3.ருத்ர - நல்லோரின் துயரத்தைப் போக்கி, தீயோரைத் தண்டிப்பவர். 

4. விஷ்ணு - எங்க்கும் நிறைந்திருப்பவர்

5.பிதாமஹ - எல்லா காரணங்களுக்கும் காரணமான உன்னத மூல கர்த்தா 

6.சம்சார வைத்ய - சம்சாரம் எனும் துன்பத்தினை நீக்குபவர்

7. சர்வக்ஞ - எல்லாம் அறிந்தவர்

8. பரமாத்மன் - மாயையால் தோன்றும் அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்ட, அனைத்து உயிரினங்களின் ஆத்மா. 

இருமை என்பதை புரிந்து கொள்ள எளிய உதாரணம், ஒரு நதியும் அதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரும் இரண்டு வஸ்துக்கள்; ஆனால் அவைகள் வேறுவேறாகத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றுதான் எனும் உண்மையினை உபனிஷதங்களும், பகவத் கீதையும் போதிக்கின்றன’. 

பகவத் கீதையின் ‘முக்தசங்கோऽனஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹசமன்வித: । சித்வ்யசித்வ்யோர்நிர்விகார: கர்தா ஸாத்விக உச்யதே’ எனும் ஸ்லோகத்தினை குறிப்பிட்டு பேசிய ஸ்ரீ சன்னிதானம், பயனை எதிர்பாராமல், அகங்காரமின்றி, தைரியத்துடனும் உற்சாகத்துடனும் கடமையாற்றுபவரே ‘சாத்விக கர்த்தா’ என்று ஆசார்யார் விவரித்தார். இங்கு நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பலன் என்பது செயலைப் பொறுத்தது, மாறாக செயல் பலனைப் பொறுத்ததல்ல, அதாவது செயலில் ஈடுபடுவது பலனை எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி, அதற்கேற்ப செயல்படும்போது, முடிவுகள் தானாகவே வந்து சேரும்’ என விளக்கினார்.  

பேராசை, கொடுமை போன்ற ராஜச குணங்களையும், சோம்பல், காலதாமதம் போன்ற தாமச குணங்களையும் மனிதர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முடிவில், காவல்துறையினரின் சேவை நாட்டுக்குப் பயனுள்ளதாக அமைய வாழ்த்தி ஆசி வழங்கினார். நிகழ்வின் நினைவாக, நேபாள காவல் துறை சார்பில் பசுபதி நாத் ஆலய மாதிரி சிலை ஆசார்யாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.  சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் வித்யாசங்கரர் ஆலய மாதிரி விக்ரஹத்தினை  நினைவுப்பரிசாக ஸ்ரீ சுவாமிகள் வழங்கினார்.

அதன்பின் நேபாள குடியரசுத் தலைவர் மாண்புமிகு ஸ்ரீ ராம் சந்திர பௌடல் அவர்களின் அழைபினை ஏற்று, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சன்னிதானம் ராஷ்டிரபதி பவன் - சீதல் நிவாஸுக்கு விஜயம் செய்தார். குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் ஆசார்யருக்கு வரவேற்பு அளித்தனர், இந்திய தூதரகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீ சுஜீத் குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !