சுக்லபட்ச மஹாஅஷ்டமி ஹோமம்
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த, நாதன்கோயில் ஜெகந்நாத பெருமாள் கோவிலில், சுக்லபட்ச மஹாஅஷ்டமி ஹோமம் நடந்தது. சோழநாட்டு திருப்பதிகளில், 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்ற நாதன்கோயில் சேத்திரம். நாதன்கோயில் கிராமத்தில், கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச அஷ்டமி சூக்த ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தால், மாங்கல்ய தடை, குழந்தை பேறின்மை, குடும்ப பிரச்னைகள், நாட்பட்ட நோய்கள் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி, செண்பகவல்லித்தாயாருக்கு, காலை, 11.30 மணிக்கு சுக்லபட்ச மஹாஅஷ்டமி ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து, தாயாருக்கு சிறப்பு அபிஷேகேம் நடைபெற்று, அலங்காராம், தீபாரதனை ஆகியவை நடந்தது. பின், மூலவர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு ஒரே நேரத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஜெகந்நாத பெருமாள் கைங்கார்ய சபா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.