நயினார்கோவில் ஆதிநாகநாதர் கோயில் வசந்த விழாவில் பூக்குழி
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொளுவூர் ஆதிநாகநாதர் கோயில் வைகாசி வசந்த விழாவில் பூக்குழி மற்றும் பால்குட உற்சவம் நடந்தது.நயினார்கோவிலில் இருந்து 8 கி.மீ., தொலைவில் ஆதி நாகநாதர்கோயில் இருக்கிறது. இங்கு மூலவர் சிவலிங்கம் பழமை மாறாமல் புற்றடி மண்ணிலே அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் வைகாசி வசந்த விழா ஜூன் 21 கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்தது. தினமும் உற்சவர் ஆதி நாகநாதர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தார்.
ஜூன் 29 இரவு நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஜூன் 30 இரவு காப்பு கட்டி விரதம் இருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் ஏராளமானவர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 31 காலை பக்தர்கள் பால்குடம் ஏந்தி திருக்கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஜாரி தேவஸ்தானம் ஆதி நாகநாத சுவாமி கோயில் பரம்பரை இனாம் டிரஸ்டி ஸ்தானீகம் குமாரசாமி பட்டர், மணிகண்டன் பட்டர் ஏற்பாடுகளை செய்தனர்.