உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம்: பக்தி வெள்ளத்தில் மிதந்த காஞ்சிபுரம்!

காஞ்சி மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம்: பக்தி வெள்ளத்தில் மிதந்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகளின் அனுஷ ஜெயந்தி மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கோலாகலமாக  நடைபெற்றது.

​ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமடத்திலுள்ள மஹா பெரியவா பிருந்தாவனத்திற்கு இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் லட்சார்ச்சனை பூஜைகள் துவங்கின. காலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன், வேத கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து, மஹா பெரியவா பிருந்தாவனத்திற்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் மற்றும் பன்னீரால் சிறப்பு மஹா அபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. ​மதிய வேளையில், சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு, பல வண்ண வாசனை மலர்களால் பிருந்தாவனம் அலங்கரிக்கப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், காஞ்சி ஸ்ரீமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சுவாமிகள் கலந்துகொண்டு பூஜைகளை முன்னின்று நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ​மஹா சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். ஸ்ரீமடத்தின் வெளிப்பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். ​விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் மடத்தின் சார்பில், கச்சபேஸ்வரர் கோவில் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !