பனையூரில் சாது காமாட்சி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா
நரிக்குடி: நரிக்குடி பனையூரில் சாது காமாட்சி அம்மன் கோவில் வைகாசிப் பொங்கல் மே 30ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அம்பாளுக்கு பால்குடம் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜைகள் நடந்தன. உற்ஸவ மூர்த்தியுடன் வான வேடிக்கை,மேள தாளங்கள் முழங்க அக்னிச்சட்டி ஏந்தி வீதி உலா வந்தனர். தொடர்ந்து விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக, கோவில் பூஜாரி 2 முறை பூக்குழி இறங்கினார். அருள் இறங்கி, தேங்காய், மல்லிகை பூவை பூக்குழியில் வைத்து மண் மேவும் நிகழ்ச்சி நடந்தது. அடுத்த ஆண்டு திருவிழாவிற்கு பூக்குழி தோண்டும் போது பூக்குழிக்குள் வைக்கப்பட்ட தேங்காய், மல்லிகைப்பூக்கள் அப்படியே வாடாமல் இருக்கும். சாது காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகளில் உள்ளூர், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்று சென்றனர்.