நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்த பணி நிறைவு
திருப்பரங்குன்றம்; நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறையினர் மற்றும் தமிழக வருவாய் அலுவலர்கள் அளவீடு செய்த பணி நிறைவடைந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால், ஹிந்து அமைப்பினர், முருக பக்தர்கள், திருப்பரங்குன்றம் பகுதி மக்கள், பூர்வீக குடியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தீபம் ஏற்றுவது சம்பந்தமான வழக்குகளும், மேல் முறையீடு வழக்குகளும் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஸ்ரீ மதி முன்னிலையில் நடந்த விசாரணையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். முழு ஆய்வு நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மே 25ல் திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில் தொல்லியல் துறை நிபுணர்கள் 5 பேர், திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி, திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, ஆர்.ஐ. செந்தில்குமார், வி.ஏ.ஓ., சக்தி, வருவாய் துறை நில அளவு பிரிவு அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் நேற்று அளவீடு செய்யும் பணியை தொடங்கினர். டி.ஜி.பி.எஸ். எனும் நவீன அளவிடும் கருவி மூலம் கோடாங்கி தோப்பு தெரு, பெரிய ரத வீதியிலிருந்து மலை மேல் செல்லும் பழனி ஆண்டவர் கோயில் தெரு, மலை அடிவாரத்திலுள்ள வீடுகள், சாவடி ஆகியவற்றை முதல்நாள் அளவீடு செய்தனர். தொடர்ந்து பழைய படிக்கட்டுகள், புதிய படிக்கட்டுகள், சமணர் படுகை மற்றும் மலை முழுவதும், மலையை சுற்றி மலை அடிவார பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டது. மலையை அளவீடு செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.