பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா; ஏராளமானோர் பங்கேற்பு
பெரியபட்டினம்; பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 125 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது. கடந்த மே 24., ஞாயிறு அன்று மாலை மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா வளாக முன்புறமுள்ள 70 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
நேற்று ஜூன் 3., புதன்கிழமை இரவு முதல் தர்கா மற்றும் பெரியபட்டினம் வீதிகள் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்க ஏராளமானோர் தூக்கி வந்தனர் குதிரைகள் முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சந்தனக்குடம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிறிது தொலைவில் 50 அடி உயரமுள்ள பல வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தர்காவை மூன்று முறை வலம் வந்தனர். பின்னர் உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது. புனித மக்பராவில் பச்சை வண்ண போர்வை போர்த்தப்பட்டு வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு மளிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் இன்று காலை 6:00 மணிக்கு சிறப்பு துவா ஓதி பொதுமக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டது. மாலையில் பகல் கூடு தூக்கிவரப்பட்டது. பெரியபட்டினம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், தர்கா கமிட்டியாளர்கள், பெரியபட்டினம் அனைத்து சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர். வருகிற ஜூன் 13 அன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.