உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில் துரியோதனன் படுகளம் விமரிசை

திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில் துரியோதனன் படுகளம் விமரிசை

திருத்தணி: மூன்று திரவுபதியம்மன் கோவில்களில், நேற்று நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருத்தணி தாலுகாவில், எஸ்.அக்ரஹாரம், பட்டாபிராமபுரம் மற்றும் தாழவேடு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில், நடப்பாண்டிற்கான தீமிதி விழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும், மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, மஹாபாரத சொற்பொழிவு நடந்தது. மேலும், மே, 27ம் தேதி, திரவுபதியம்மன் திருமணம், 29ம் தேதி சுபத்திரை அம்மன் திருமணம், இம்மாதம் 4ம் தேதி அர்ச்சுனன் தபசு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிலையில், நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. மாலை 6:30 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர்.

தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !