நடராஜரின் லீலைகள்!
சிதம்பரம் நடராஜர் அருளால் ஊமைப் பெண்ணை பேசவும், பாடவும் வைத்தார் மாணிக்கவாசகர். வியாக்ரபாதரின் மகன் பாலுக்காக அழுதபோது பாற்கடலையே தில்லைக்கு வரவழைத்தார் அம்பலவாணர். மாணிக்கவாசகர் திருவாசகம் பாடப் பாட சிவன் தன் கைப்பட ஓலையில் எழுதி அம்பலவாணன் என கையொப்பமிட்டு பஞ்சாட்சரப் படியில் வைத்தார். ஆனி மகத்தில் அந்த ஓலையை தில்லை மூவாயிரவர் எடுத்து மாணிக்கவாசகரிடம் தர, அவர் அதை எடுத்துக் கொண்டு பஞ்சாட்சரப் படி வழியே கருவறை அடைந்து இறைவனுடன் கலந்தார்.
சேக்கிழார், அறுபத்து மூவர் வரலாற்றை பெரிய புராணமாக எழுத நடராஜரிடம் வேண்டிய போது இறைவனே உலகெலாம் என அடி எடுத்துக் கொடுத்தார். பின் சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதி முடித்து அதை சிதம்பரம் ஆயிரம் கால் மண்டபத்தில் அரங்கேற்றினார்.
பொன்னம் பலத்தினின்று சிற்றம்பலம் செல்ல உள்ள பஞ்சாட்சரப் படிகளின் இருபுறமும் யானைத் துதிக்கை அமைப்பு உள்ளது. எனவே அதை திருக்களிற்றுப்படி என்றும் சொல்வர். உய்ய வந்த சேந்த நாயனார் தாம் எழுதிய நூலை திருக்களிற்றுப்படியில் வைத்துவிட்டு வணங்கினார். அப்போது அக்களிறு தன் துதிக்கையால் அந்த நூலை எடுத்து கூத்தபிரான் காலடியில் வைத்த அதிசயம் நடந்தது. அதனால் இந்நூலுக்கு திருக்களிற்றுப்படியார் எனப் பெயர்.