மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தில் 38 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழாவை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தில் உள்ள ஆதி குருத்துடைய அய்யனார் கோயிலில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு வருடம் தோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமைக்காகவும் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்று வந்தது. கடந்த 38 வருடங்களாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் திருவிழா நடைபெறுவதற்காக கடந்த வாரம் கிராமத்தில் உள்ள கோயில்களில் காப்பு கட்டபட்டதை தொடர்ந்து ஏராளமான கிராம மக்கள் விரதம் இருந்து கிராமத்தில் இருந்து பிடி மண் எடுத்துக்கொண்டு மானாமதுரையில் உள்ள குலாலர் தெருவில் புரவிகள்,மாடுகள், சுவாமி உருவங்களை செய்யப்பட்டு வந்தது. நேற்று திருவிழாவை முன்னிட்டு பட்டத்தரசி கிராமத்தில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களோடு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக குலாலர் தெருவிற்கு சென்று அங்கு பூஜைகளை நடத்திய பின்னர் புரவிகளை தூக்கிக் கொண்டு மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை வந்தடைந்த பின்னர் புரவிகளுக்கும்,மாடுகளுக்கும், சுவாமி உருவங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.பின்னர் அன்னதானமும்,கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. புரவி எடுப்பு திருவிழாவிற்காக வெளியூர்களில் இருந்த கிராம மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு வந்து கலந்து கொண்டு திருவிழாவை கொண்டாடினர்.