உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் மாஸ்டர் பிளான் திட்ட பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

திருத்தணி கோவில் மாஸ்டர் பிளான் திட்ட பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 103 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், ‘மாஸ்டர் பிளான்’ திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் குமார், பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருத்தணி முருகன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாஸ்டர் பிளான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், மாற்றுப்பாதை மற்றும் இரண்டாவது மலைப்பாதை, ராஜகோபுரம் இணைப்பு படிகள், கார் பார்க்கிங், வணிக வளாகம், மூன்றடுக்கு அன்னதானக்கூடம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள், கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கி துரிதகதியில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 29.75 கோடி ரூபாய் மதிப்பில், மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் கீழே இறங்கும் மாற்று மலைப்பாதை பணிகளை, மாவட்ட பொறுப்பு அமைச்சரும், செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான குமார் நேற்று காலை ஆய்வு செய்தார்.

அப்போது, கலெக்டர் கவிதா, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, உதவி கோட்ட பொறியாளர் மதியழகன், உதவி பொறியாளர் திவ்யா, கோவில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, திருத்தணி – சித்துார் சாலை ராஜிவ் காந்தி நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 2.30 கோடி ரூபாயில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

இப்பணிகளையும் நேற்று அமைச்சர் குமார், கலெக்டர் கவிதா ஆகியோர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சர் புகழாரம் பின்னர் அமைச்சர் குமார் பேசுகையில், ‘‘முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை, கடந்த ஆட்சியில் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். இது தவிர, 103 கோடி ரூபாய் மாஸ்டர் பிளான் திட்டத்தில் மிக அற்புதமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர்.

‘‘ பணிகள் சற்று காலதாமதமானாலும், இப்பணிகள் முடிவடையும்பட்சத்தில், அனைத்து பக்தர்களும் எளிமையாக மலைக்கோவிலுக்கு சென்று தரிசிக்கலாம்,’’ என்றார்.

3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வைகாசி கிருத்திகை விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலும், காலை 9:30 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


கிருத்திகை விழா என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை 6:00 மணி முதலே திரளான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஆட்டோ, பேருந்து, வேன் போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் 12 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !