முருகன் கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
நத்தம்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் நடந்த கார்த்திகை வழிபாடில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு வெள்ளிக்கவசம் ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பழநி: முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்க மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், ஆறு கால பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.