உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரோவரிநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

புரோவரிநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

பேட்டை: கீழக்கல்லூர் புரோவரிநாதர் (சிவன்) கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேட்டையை அடுத்த கீழக்கல்லூரில் பழமை வாய்ந்த அழகாம்பிகை உடனுறை புரோவரி (புறவேலி) நாதர் கோயில் உள்ளது. இக்கோயில் முழுவதும் பிரித்து எடுக்கப்பட்டு, மண்டபங்கள், விமானங்கள் அமைத்து பல்வேறு திருப்பணிகள் நடந்தது. பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டதை தொடந்து கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. கைலாசபட்டர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பூஜைகளை செய்தனர். தொடர்ந்து தினந்தோறும் யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவான நேற்று காலை பிம்பசுத்தி, நான்காம் கால பூஜைகள், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. வேதமந்திரங்கள், மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் விமானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரசன்ன பூஜை, சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்திய ஞான பண்டார சந்நிதி சுவாமிகள், நெல்லை எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், மானூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் சத்யசீலன், மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ராமு வெங்கடாசலம், உருதுபாண்டி, முருகன், யூனியன் துணை சேர்மன் சிவசுப்பிரமணியன், கொண்டாநகரம் பஞ்., தலைவர் துரை ஆணைக்குட்டி, பழவூர் பஞ்., தலைவர் குமாரசாமி, கோடகநல்லூர் பஞ்., தலைவர் மல்லிகா வெள்ளபாண்டி, சுத்தமல்லி பஞ்., தலைவர் பிரம்மநாயகம் பேச்சியம்மாள், கருங்காடு பஞ்., தலைவர் சண்முகசுந்தரம், ராஜவல்லிபுரம் பஞ்., தலைவர் மாயாண்டி, மருதூர் ராமசுப்பிரமணியன், புலவர் அகஸ்தீஸ்வரன், ஆசிரியர் திரவியம், ராமு வெங்கடாசலம், தொழிலதிபர் முருகவேல், நெல்லை கல்சுரல் அகடமி செயலாளர் காசிவிஸ்வநாதன், தாழையூத்து நகர செயலாளர் மூக்காண்டி, மூவேந்தர் லெட்சுமணன், மாரியப்பன், சண்முகய்யா பாண்டியன், நயினார், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி அப்பர் உழவாரப்பணிக்குழு, தூத்துக்குடி திருத்தாண்டகவேந்தர் உழவாரப்பணிக்குழு, ராமபக்தசபா, பேட்டை, சுத்தமல்லி ஆனந்தகூத்தர் உழவாரப்பணிக்குழு, திருச்சிற்றம்பல வழிபாட்டுக்குழு, பசுபதிநாதர் வழிபாட்டுக்குழு, மேலகரம் அருளிசை மன்றம், திருவாசகம் முற்றோதுதல் குழு, தென்திருப்புவன நாதர் பக்தர் பேரவை குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !