மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் நீர்வரத்து குறைவால் பக்தர்கள் ஏமாற்றம்
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் மலைப்பகுதியில் உள்ள சுனையில் நீர் வரத்து குறைவதால் குளிக்க வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது வேலப்பர் கோயில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியிலும் அதனை அடுத்து வரும் நான்கு வாரநாட்களிலும் நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வர். மலைப்பகுதியில் மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் மழை இல்லாததால் சுனையில் நீர் வரத்து குறைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீர் விழும் இடத்தில் தேங்கியுள்ள நீரில் குளித்து செல்கின்றனர். சுனையில் நீர்வரத்து குறைந்ததால் அதிகப்படியான பக்தர்கள் குளிக்க முடியவில்லை. எதிர்பார்ப்பில் வரும் பக்தர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர், குளிக்கும் வசதி இருந்தாலும் சுனை நீரில் நீராடுவதையே பக்தர்கள் விரும்புகின்றனர்.