கடம்பூர் மாரியம்மன் கோயில் திருக்குட முழுக்கு: பக்தர்கள் பரவசம்!
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் ஸ்ரீமாரியம்மன் கோயில் நூதன தங்கக் கொடிமரம் ஸ்தாபனம் மற்றும் திருக்குட முழுக்கு பெருவிழா கோலாகலமாக நடந்தது. கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நூதன தங்கக்கொடி மரம் ஸ்தபானம் மற்றும் திருக்குட முழுக்கு பெருவிழா நேற்று (ஜன.23) வெகுவிமரிசையாக நடந்தது. இதில் புதியதாக நிறுவப்பட்டுள்ள தங்கக் கொடிமரத்திற்கும், ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்கள், பரிவார தேவதைகளுக்கும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கடந்த 18ந்தேதி முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. மேலும் கடந்த 20ந்தேதி ரக்÷க்ஷõக்ன ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, 21 மற்றும் 22ந்தேதிகளில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று (ஜன.23) திருக்குட முழுக்கு பெருவிழாவை முன்னிட்டு காலையில் ஆறாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து கடம் புறப்பாட்டிற்கு பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சிவாச்சாரியார்களும் கருடபகவானின் ஆசிருக்காக காத்திருந்தனர். இந்நிலையில் சுமார் 9.34 மணியளவில் ராஜகோபுரத்திற்கு மேலே வானில் ஏராளமான கருடபகவான்கள் வட்டமடித்தபடி பறந்தன. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஓம்சக்தி பராசக்தி என்ற பக்த கோஷம் விண்ணை பிளக்க தங்கக்கொடி மரம், ராஜகோபுரம், விமானம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் திருக்குட நன்னீராட்டு நடந்தது. நகர பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.