வெங்கடேச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
திருவாலங்காடு: சின்னகளக்காட்டூர் வெங்கடேச பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு, தக்கோலம் சாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு தொடங்கியது. மஹா சுதர்சன ஹோமம், முதல் கால யாக பூஜை நடந்தன. நேற்று இரவு 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு, அக்னி சதுஸ்தானார்ச்சனம், இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 7:45 மணிக்கு, மூலவ விமானம் மற்றும் கோபுரங்களுக்கு, புனிதநீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், மண்டல பூஜை நடக்கிறது.