எச்சூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
மாமல்லபுரம்: எச்சூரில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. மாமல்லபுரத்தை அடுத்த எச்சூரில், பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், லட்சுமி நாராயண பெருமாள், இடதுபுறம் லட்சுமியை இருத்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பினும், பொதுமக்களே பராமரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2007ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் முடிவெடுத்து, லட்சுமி நாராயண பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு, பஞ்சலோக சிலைகள் வடித்தனர். கோவிலுக்கு புதிதாக வண்ணம் தீட்டியும், முன்புறம் கூரை அமைத்தும் திருப்பணிகள் செய்தனர். கடந்த 16ம் தேதி, முதல் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேக விழா சடங்குகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து, 8:00 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார மக்கள் திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.