உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆனி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின்போது, ஆசியாவிலேயே அதிக எடை கொண்டதாக கருதப்படும் சுவாமி நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் ரதவீதிகளில் வலம் வரும். இந்த தேர்களை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்ப்பது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தங்க சப்பரத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவிழா மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் பெரிய தங்க கொடிமரம் முன்பு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க, பஞ்சவாத்தியம் இசைக்க திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 23-ம் தேதி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 27-ம் தேதி தங்கச் சப்பரத்தில் கங்காளநாதர் வீதியுலாவும், 28-ம் தேதி ஆனி தேரோட்டமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !