ராமநாதபுரத்தில் கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி லட்சுமிபுரத்தில் உள்ள குலுமா விளக்காளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 24 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
நவசக்தி ஹோமம், இயந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் மற்றும் பூர்ணாஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது.
நேற்று காலை 8:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாட்டிற்கு பிறகு கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலுமாவிளக்காளியம்மன் கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
* திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேதலோடை அருகே பன்னிவெட்டி வலசையில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 10:15 மணிக்கு மூலவர்கள் கற்பக விநாயகர், பாலமுருகன் கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பன்னி வெட்டி வலசை கிராம மக்கள் செய்திருந்தனர்.
* மண்டபம் ஒன்றியம் இருமேனி அருகே அலைகாத்தவலசையில் நேற்று காலை 11:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அழகு கற்பக விநாயகர், நவக்கிரகங்கள், அழகு முத்து மாரியம்மன், காந்தாரியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். உத்தரகோசமங்கை நாகநாத குருக்கள் பூஜைகளை செய்தார்.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அலைகாத்த வலசை கிராம மக்கள் செய்திருந்தனர்.
* உச்சிப்புளி அருகே வட்டான்வலசை கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று காலை நடந்தது. கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிேஷகம் நடத்தினர். மூலவர் அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது. கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.
* முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், முருகன், செல்வ விநாயகர், வேணுகோபால சாமி, ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தன பூஜை, முதல் கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று காலை கலச புறப்பாட்டுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது. அரியநாச்சி அம்மன், செல்வ விநாயகர், முருகன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
*ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி இந்து சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜைகளுக்கு பின் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு புனித நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.