பல்லவர் காலத்து கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் விழுப்புரம் அருகே கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அடுத்த பேரணி, மூங்கில்பட்டு கிராமங்களில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை, ஐயனார், மூத்ததேவி மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த நந்தி உள்ளிட்ட சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: கூட்டேரிப்பட்டு அடுத்த பேரணி பகுதியில் கொற்றவை சிற்பம் உள்ளது. 5 அடிக்கும் மேல் பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டு, 8 கரங்களுடன் எருமைத் தலைமீது நின்றிருக்கிறார். கொற்றவையின் முன் வலக்கரம் மேல்நோக்கி விரிந்தும், அதனுள் கிளி அமர்ந்திருக்கும் வகையில் கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் வலது காலுக்கு அருகே படுமெடுத்தாடும் பாம்பு காட்டப்பட்டுள்ளது. இதுவரை எந்தச் சிற்பத்திலும் பாம்பு தனித்தில்லை. இதனால், இக்கொற்றவைச் சிற்பம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொற்றவைக்கு அருகிலேயே முற்றுப் பெறாத ஐயனார் சிற்பமும், பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் சூரியன் தெய்வ சிற்பமும் காணப்படுகின்றன. இவையும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவையாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. இங்குள்ள ஜைனக் கோவிலின் வாசலுக்கு அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த கலைநயமிக்க நந்தி சிற்பம் காணப்படுகிறது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளதை இந்த சிற்பங்கள் காட்டுகின்றன.
மூங்கில்பட்டு கிராமத்தில் ராமநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பலகைக் கல் சிற்பம் காணப்படுகிறது. இதனை அன்னபூரணி என வணங்கி வருகின்றனர். ஆனால், அது மூத்ததேவி சிற்பம் ஆகும். அழகிய ஆடை அலங்காரம் மற்றும் அணிகலன்களுடன், திண்டின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில் மூத்ததேவி காணப்படுகிறார். சிற்பத்தின் வலது மேல் மூலையில் மகன் மாந்தனும், இடது மூலையில் மகள் மாந்தியும் காணப்படுகின்றனர். பல்லவர் காலத்திற்குரிய கலைப்பாணியில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிவாலய வளாகத்தில், கலைநயத்துடன் கூடிய கொற்றவை, விஷ்ணு சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த சிற்பங்கள் அனைத்தும் கி.பி., 8 மற்றும் 9ம் நுாற்றாண்டிற்கு உரியவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூங்கில்பட்டு கிராமத்தில் சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார். ஆய்வின்போது தென்கோடிப்பாக்கம் தினேஷ், பேரணி புஷ்பநாதன், புதுச்சேரி செங்குட்டுவன், மூங்கில்பட்டு காசிநாதன் உடனிருந்தனர்.