சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா வருடம் தோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த வருடத்திற்கான விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத்தொடர்ந்து தினம்தோறும் சுவாமிகள் அன்னம்,கமலம்,சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். நேற்று முன்தினம் 27ம் தேதி சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று மாலை தேரோட்ட விழாவை முன்னிட்டு அம்மனும்,சுவாமியும் அலங்காரங்களுடன் தேருக்கு எழுந்தருளினர்.இதனை தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு மேலநெட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய்,பழம் உடைத்து அர்ச்சனை செய்தனர்.தேர் நிலையை அடைந்ததும் சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலநெட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் செய்திருந்தனர்.