உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /   பாரம்பரியத்தை பாதுகாக்கும் காஞ்சி காமகோடி பீடம்; துணைநிலை கவர்னர் பெருமிதம்

  பாரம்பரியத்தை பாதுகாக்கும் காஞ்சி காமகோடி பீடம்; துணைநிலை கவர்னர் பெருமிதம்

புதுடில்லி: ‘‘நம் நாட்டின், 2,500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைப் பாதுகாத்து, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் பணியில் காஞ்சி காமகோடி பீடம் ஈடுபட்டுள்ளது,” என, துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்து பேசினார்.


இந்தியா ஹெபிடேட் சென்டரில் நடந்த இந்தியா அறக்கட்டளை நிகழ்ச்சியில், டில்லி துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்து பேசியதாவது: தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட காஞ்சி காமகோடி பீடம், நம் நாட்டின் 2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியத்தை பாதுகாத்து, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. வேதங்களை பாதுகாத்தல், ஒருங்கிணைந்த பாடசாலைகள், மருத்துவ தொண்டு நிறுவனங்கள் ஆகிய பணிகளை ஆச்சார்ய பரம்பரை இடைவிடாமல் செய்து வருகிறது. நாட்டின் தலைநகராக திகழும் டில்லி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த காலகட்டத்தில், காஞ்சி காமகோடி பீடம் போன்ற ஆன்மிக நிறுவனத்திடம் இருந்து ஆழ்ந்த உத்வேகத்தை பெறுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் ஆன்மிக உரைகள் வாயிலாக, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தியதில் காஞ்சி காமகோடி பீடம் ஆற்றிய பணிகள் அளப்பரியது. முன்னோர்களின் கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயம் ஆக்கியது மற்றும் பாரம்பரிய கோவில் கட்டடக் கலையை மீட்டெடுத்தது உள்ளிட்ட பணிகள் வாயிலாக பாரம்பரியத்தை பாதுகாத்ததில், காஞ்சி மடம் பெரும் சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். காஞ்சி காமகோடி பீட தலைவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்தியா அறக்கட்டளை தலைவர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !