பெரும்பேர் கண்டிகை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணி தொடக்க விழா
அச்சிறுபாக்கம்; பெரும்பேர் கண்டிகை சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், சுவாமி சிலைகளுக்கு இன்று பாலாலயம் செய்யப்பட்டது.
அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகையில், பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத சம்ஹார ஷண்முக சுப்ரமணிய கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 2005-ம் ஆண்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது. தற்போது, கோவிலின் சன்னதி, சுயம்பு பாறை விநாயகர், செல்வ விநாயகர், சுந்தர விநாயகர், நவக்கிரக சன்னதி, மண்டபகங்கள், மதில் சுவர் இடிந்து சேதமடை ந்துள்ளன. மேலும், பிரகார வளாகம் போதிய இடவசதியின்றி இருப்பதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கும்பாபிஷேகம் நடந்து 21 ஆண்டுகள் ஆனதால், கோவிலின் படி மண்டபகங்களை புனரமைக்கும் திருப்பணி இன்று தொடங்கியது. இதற்காக இன்று சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்,கோவில் அர்ச்சகர் ரவி சிவாச்சாரியார் தலைமையில் கோ பூஜை செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பூஜை நடந்தது.