வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், மஞ்சள் சாமந்தி, எலுமிச்சை மாலை அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி – தெய்வானை சமேத முருகனுக்கு பால் அபிஷேகத்தை தொடந்து, மஞ்சள் சாமந்தி படிமாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11:30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடந்தது. பின், உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும், அமாவாசையும் ஒருங்கே வந்ததால், ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உத்சவத்தில் பங்கேற்றனர். இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன.