உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமி; கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்

அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமி; கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்

மதுரை; மேலூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகள்ளழகர் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகள்ளழகர் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் எனப்படும் ஸ்ரீகள்ளழகர் திருக்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழா கடந்த ஜூலை 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஸ்ரீகள்ளழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்தியான ஸ்ரீகள்ளழகர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளிய ஸ்ரீகள்ளழகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்த திருத்தேர், மீண்டும் தேரடி நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் கைகளைத் தட்டி பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100-க்கும் மேற்பட்ட மருத்துவம், சுகாதாரம், வருவாய்த்துறை பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் அவசர சேவையில் ஈடுபட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் விழா நிகழ்வுகளை எளிதாகக் காணும் வகையில் 6 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இந்த திருத்தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீகள்ளழகர் தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !