போகர் தியான குடிலில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி
சூலுார்: பாப்பம்பட்டி போகர் தியான குடிலில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது.
போகர் தமிழ் சங்கமும், மாயோனி ஞானவொளி பீடமும் இணைந்து, பாப்பம்பட்டி போகர் தியான குடிலில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது.
தத்துவ மரபில், ஞான வழிகாட்டலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி முக்கியம். ஒற்றுமை உணர்வுடன் கூட்டாக செயல்பட வேண்டும். கலைத்துறை பங்களிப்பு போல், ஆன்மிக, தத்துவ துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும், என, மாயோனி அம்மா பேசினார்.
கலை, இலக்கிய போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவிந்தராஜ், ராமமூர்த்தி, சீனிவாசன், ரேணுகா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல், சூலூர் சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* துடியலுார் அருகே, என்.ஜி.ஜி.ஓ., காலனி சின்மயா கிருபா ஆலயத்தில் குரு பூர்ணிமா ஆராதனா நிகழ்ச்சி நடந்தது. சின்மயா மிஷன் ஆச்சார்யா சுவாமினி சம்பிராஷ்டானந்தா பேசுகையில், ‘‘மக்களுக்கு அனைத்து வகையான சேவைகளையும் செய்யும் இடத்தில், செல்வங்கள் தானாக வந்து சேரும். உண்மையான குரு, தன்னுடைய சீடர்கள் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். வேத வியாசர், சங்கராச்சாரியார் ஆகியோரின் ஆன்மிக சேவைகள் பிரம்மாண்டமானது,’’ என்றார். குருபூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, குரு வணக்கம் செலுத்தினர்.