தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா தெப்ப உற்ஸவத்துடன் நிறைவு
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் திருமஞ்சன, தெப்ப உற்ஸவத்துடன் ஆடித்திருவிழா நிறைவு பெற்றது.
இக்கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 21ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் சவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஜூலை 27ல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்ஸவத்தை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக பக்தர்களின் விண்ணதிரும் கோவிந்தா கோஷத்துடன் ஜூலை 29ல் தேரோட்டம் நடந்தது. 10ம் நாள் (ஜூலை 30) காலை கோயில் திருக்குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி நடந்தது. அன்று பகலில் த்வாதசாரதன புஷ்பயாக அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு கேடய வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று தெப்ப உற்ஸவம் விமர்சையாக நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாளுக்கு திருமஞ்சனம், அதன்பின் பூப்பல்லக்கில் எருந்தருளலுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அலுவலர்கள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.