மயிலாடுதுறையில் தண்ணீர் இன்றி வறண்ட காவேரி ; பம்பு செட்டு மூலம் நீராடி வழிபாடு
மயிலாடுதுறை; தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18 நாள் நீர்நிலைகளை குறிப்பாக காவிரியை போற்றி வணங்கும் விழாவாகவும், இயற்கையான நீர் வளர்த்தால் விவசாயம் பெருகியதற்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் விவசாயம் செழித்து வாழ்வு வளம் பெற வேண்டி காவிரி ஆற்றங்கரையில் மணல் மற்றும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து காதோள கருகமணி மற்றும் பழங்கள் வைத்து பூஜிப்பது வழக்கம். புதுமண தம்பதியர் பூஜைகள் செய்து தாலி பிரித்து சேர்த்து திருமண மாலைகளை நதியில் விடும் நிகழ்வும், சுமங்கலி பெண்கள் புதிய மஞ்சள் நானில் தாலி மாற்றிக்கொண்டு மஞ்சள், குங்குமம், மங்களப் பொருட்களை பரிமாறிக் கொண்டு அன்னதானம் வழங்குவது சிறப்பு.
இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராததால் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கலை இழந்து காணப்பட்டது. காவிரியில் தண்ணீர் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் காவிரி நீரை வரவேற்று வணங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் இருந்து புதுமண தம்பதிகள் பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு குடும்பத்தினருடன் வந்து தாலி பிரித்து சேர்த்து திருமண மாலைகளை கடல் நீரில் விட்டு சென்றனர். சொற்ப எண்ணிக்கையிலான சுமங்கலி பெண்கள் பூம்புகார் கடற்கரைக்கு வந்து புதிய மஞ்சள் நானில் தாலி மாற்றிக் கொண்டனர். குடும்பத்து பெரியவர்கள் காவிரி சங்கமத் துறையில் வைத்து பூஜைக்கப்பட்ட மஞ்சள் கயிறுகளை இளையவர்களுக்கு கட்டி விட்டனர். மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நகராட்சி சார்பில் பம்பு செட்டு மூலம் விடப்பட்ட தண்ணீரில் நீராடிய புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் காவிரி கரையில் பூஜைகள் செய்து தாலி பிரித்து சேர்த்தும், புதிய மங்கள நானில் தாலி மாற்றிக் கொண்டும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.