ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நம்மை வேண்டி சப்த தச மகா யாகம்
மயிலாடுதுறை: ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நம்மை வேண்டி சப்த தச மகா யாகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காவிரி கடைமடை பகுதியான இந்த மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உல்லாவதை போக்கும் விதமாகவும் மழை பெய்து காவிரியில் தண்ணீர் வர வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் பழமையான இக்கோவிலில் ஆடிப்பெருக்கு நாளான நேற்று கிராம மக்கள் ஒன்றிணைந்து சப்த தச மகா யாகம் நடத்தினர். இதனை முன்னிட்டு கோவிலில் 18 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகம் மற்றும் ஜெபம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. யாகம் மற்றும் பூஜைகளை அருள் சிவம் சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர் இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். சிறப்பு யாகத்திற்கான ஏற்பாடுகளை நாடி ஜோதிடர்கள் செல்வமுத்துக்குமார், மாமல்லன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.