ஆண்டு முழுவதும் நொய்யல் ஆற்றில் நீர் பெருக மனமுருக வழிபாடு
மங்கலம்: நொய்யல் தடுப்பணை நிரம்ப வேண்டும்... ஆண்டு முழுவதும் ஆற்றில் தண்ணீர் ஓட வேண்டும்... என்ற பிரார்த்தனையுடன், மங்கலம் அருகேயுள்ள நல்லம்மன் தடுப்பணை வளாகத்தில் அமைந்துள்ள நல்லம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நல்லம்மன் தடுப்பணை, நல்லம்மன் என்ற சிறுமியின் தியாகத்தால் முழுமை பெற்றதாக உள்ளூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிறுமியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நல்லம்மன் கோவிலில், அவரது வழித்தோன்றல்கள் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது நொய்யலில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தடுப்பணை முழுமையாக நிரம்பி, ஆண்டு முழுவதும் ஆற்றில் தண்ணீர் பாய வேண்டும் என வேண்டி, விழாக்குழுத் தலைவர் திருமூர்த்தி தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நல்லம்மன், கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டதுடன், தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் படையலாக வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நொய்யல் ஆற்றில் மலர் துாவி, நீர்வளம் பெருக வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.