ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்? என்ன செய்யக்கூடாது!
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.
அமாவாசையில் முன்னோர்களின் ஆன்மாக்கள் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம் உள்ளதால் வாசலில் கோலம் இடுவதைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய சுபகாரியங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தொடங்கக் கூடாது.முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் வரை உணவு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.