உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி

மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் அகோர மூர்த்தி, நடராஜர், நவகிரகங்களில் புதன் பகவான், காளி தேவி ஆகியோர் தனித்தனி சன்னதிகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோவிலில் சந்திர, சூரிய, அக்னி என மூன்று தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. இந்த தீர்த்த குளங்களில் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் தீர்த்த குளங்கள் முன்பு எழுந்தருள அஸ்திர தேவருக்கு 16 வகையான வாசனை திரவியங்கள், சந்தனம், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு ஒவ்வொரு குளங்களிலும் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூன்று தீர்த்த குளங்களிலும் புனித நீராடி தீர்த்தவாரியை  தரிசனம் செய்தனர். பூஜைகளை ராஜப்பா குழுக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் செய்திருந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !