ஆடிப்பூரம் வைபவம் வைணவ திருத்தலங்களில் கோலாகலம்
காரமடை; வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூர நட்சத்திரம் அனைத்து வைணவத் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டாள் வைபவ விழா நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம். கால சந்தி பூஜை முடிந்து ஆண்டாள் சன்னதியில் விஸ்வக்ஷேனர், லட்சுமி நாராயண ஆராதனம் புண்ணியாவஜனம், கலசவாகனம் முடிந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி ஆண்டாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டுடுத்தி வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ ரங்க மண்டபத்தில் ஸ்ரீ ரங்கநாதர் முன் ஆண்டாள் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை ஸ்ரீ சடாரி மரியாதை சாற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்தலத்தார்கள் திவ்ய பிரபந்தத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்கள் சேவித்தனர். தொடர்ந்து உச்சிகால பூஜை சாற்று மறை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானூர் பங்கேற்றனர்.