கோயில்களில் முகூர்த்த நாள் கூட்டம்
திருவாடானை: ஆடி முடிந்து ஆவணி பிறந்ததால் நேற்று முகூர்த்த நாளில் கோயில்களில் கூட்டம் அதிகமானது.
ஆடி மாதம் முடிந்து மூகூர்த்த நாட்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்ததையடுத்து திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கூட்டம் அதிகமானது. நேற்று ஆவணி மாதத்தில் முதல் முகூர்த்தம் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடந்தன. கோயில் முன்பும், சுற்றியும் திரளான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுமணத் தம்பதிகளின் வருகையும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வாகனங்கள் அதிகமாக இருந்ததால் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 100 ஜோடிகளுக்கு திருமணம்
திருப்போரூர்: ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான நேற்று, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 100க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால், கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே செல்ல முடியாமல் திணறினர்.
திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மறறும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடத்தப்படுகின்றன.
இக்கோவிலில், திருமணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால் நேற்று கோவில் வளாகத்தில் 72 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இருப்பினும், 100க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.
அவர்கள் கோவில் 16 கால் மண்டப பகுதி, கோவில் பிரகாரம், உற்சவர் மண்டபம், வட்ட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் திருமணம் செய்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் திருமணம் முடித்த தம்பதிகளும் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர்.
இதனால் திருமணத்துக்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கோவிலுக்குள் சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள் வெளியே செல்ல முடியாமல் திணறினர்.
இது ஒருபுறம் இருக்க கோவில் சுற்றி மாடவீதியில் 15க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால், மாடவீதிகள் மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 105 திருமணங்கள்
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 105 திருமணங்கள் நடந்தன.
நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றான கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு, திருமணம் செய்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று ஒரே நாளில் இக்கோவிலில், 105 திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் சாலைக்கரையில் சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால், கடலுார்–பாலுார் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலில் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருந்ததால் சுவாமி தரிசனம் செய்யவும் தாமதம் ஏற்பட்டது.