உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்களின் வசதிக்காக கூலிங் பெயிண்ட்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்களின் வசதிக்காக கூலிங் பெயிண்ட்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில்,பக்தர்கள் சுற்றி வரும்போது வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கூலிங் பெயிண்ட் அடிக்கும் நிகழ்ச்சி. அமைச்சர் கமலி துவக்கி வைத்தார். கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 14ம் தேதி தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

அப்போது சாமி தரிசனம் முடித்து இரண்டாம் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது,நண்பகல் வேளை என்பதால் கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் திருமாளிகை பத்தி கல் மண்டபம் பகுதியில் ஏறி அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பிரகாரத்தை சுற்றி கோவிலை வலம் வந்தார். அப்போது செயல் அலுவலர் சபரீஷ் குமாரிடம் பக்தர்கள் பிரகாரத்தைச் சுற்றி வருவதற்கு வசதியாக கயிறு மேட், கூலிங் பெயிண்ட்,தண்ணீர் ஊற்றுதல் என ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இதனையடுத்து,தமிழக கால்நடைத்துறை அமைச்சரும் அவிநாசி சட்டமன்ற எம்.எல்.ஏவுமான கமலி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் அடிப்பதற்கான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியை தவெக மாவட்ட கொள்கை பரப்பு இணை அமைப்பாளர் தம்பி ராஜேந்திரன்,மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அவிநாசி தவெக நகரச் செயலாளர் மோகனசுந்தரம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த்,துணைச் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !