ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு காஞ்சி அனந்தசரஸ் குளம் திறப்பு
காஞ்சிபுரம்: சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, ஆவணி அவிட்டத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் அருள்பாலிக்கும் அனந்தசரஸ் குளம் நேற்று திறக்கப்பட்டது.
சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ததாதேசிக திருவம்சத்தார் சபை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், ‘ ஆவணி அவிட்டத்தின் ஒரு பகுதியாக புனித நீராடுதல் உள்ளிட்ட சடங்குகளை செய்வதற்காக, தங்கள் சபையினர், வேதபாராயணக்காரர்கள் மற்றும் ஸ்தலத்தார்களை, அவரவர் சடங்குகளை நிகழ்த்துவதற்காக, அனந்தசரஸ் குளத்தைத் திறந்து வைக்கும்படி, வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’என, குறிப்பிட்டிருந்தது. இந்தமனுவை விசாரித்த நீதிமன்றம், ‘ புனித நாட்களில், அனந்தசரஸ் குளத்தைத் திறக்கலாம் என, 2020ம் ஆண்டு ஜூனில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘எனவே, குளத்தை திறக் கக்கோரி மனுதாரர் தரப்பில் அளித்த மனுக்களை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை, வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, ஆவணி அவிட்டமான நேற்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளம் நேற்று காலை 6:00 மணி முதல், 8:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் திறக்கப்பட்டது. இதையடுத்து, ததாதேசிக திருவம்சத்தார் சபையினர், வேதபாராயணக் காரர்கள் மற்றும் ஸ்தலத்தார் உள்ளிட்டோர் அனந்தசரஸ் குளத்தில் தங்களது சடங்குகளை நிகழ்த்தி, புனித நீராடினர். ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள், ஆவணி அவிட்ட சுபமுகூர்த்த விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, பெரிய காஞ்சிபுரம் வாணியர் தர்ம பரிபாலன சங்கம் சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நடந்த பூணுால் மாற்றும் வைபவத்தில், ஏராளமானோர் பூணுால் மாற்றிக் கொண்டனர்.