செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆவணி வளர்பிறை சதுர்த்தசி சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் ஆவணி வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில், ஆறு நாள் அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி நாட்-களில் நடராஜர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி நட்சத்திரத்தையொட்டி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதுதலுடன் பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், மீனாட்சி சொக்கநாதர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தன. திருநாவுக்கரசு திருமட சிவனடியார் நாச்சியப்பன் செய்து வைத்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு ஆவணி சதுர்த்தசி சிறப்பு வழிபாடு நடந்தது.