உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நாகை வேளாங்கண்ணி சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.


நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா சர்ச் உள்ளது. இங்கு, ஆண்டு திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டு, துவங்கியது. நேற்று மாலை, 5:45 மணிக்கு சர்ச் முகப்பில் இருந்து கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து முகப்பை வந்தடைந்தது. தஞ்சை பிஷப் சகாயராஜ், புனிதம் செய்த பின் கொடியேற்றி, விழா துவங்கியது. தொடர்ந்து, மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.


முக்கிய நிகழ்ச்சியாக, செப்., 7ம் தேதி, தஞ்சை பிஷப் சகாயராஜ் தலைமையில், சர்ச் கலையரங்கில் கூட்டுப்பாடல் திருப்பலிக்கு பின், இரவு, 8:00 மணிக்கு பெரிய சப்பர பவனி நடக்கிறது. 8ம் தேதி மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை, 6:00 மணிக்கு தஞ்சை பிஷப் சகாயராஜ் தலைமையில், சர்ச் கலையரங்கில், திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, மாலையில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் சர்ச் மேல், கீழ் கோவில்கள் மற்றும் விண்மின் சர்ச்சில், நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கணி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலி நடக்கும். சர்ச் கலையரங்கத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், நவநாள் ஜெபம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !