கிருஷ்ண ஜெயந்தி; குழந்தையிடம் ஆசி பெறுவோம்..! குறைகள் யாவும் நீங்கும்!
கண்ணபிரான் கருணையே வடிவமானவர். தனக்கொரு அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை. தன் பக்தர்களை அவர் கைவிட்டதில்லை. துரியோதனன் தன் தளபதியாக பீஷ்மரை நியமித்திருந்தான். மகாபாரத யுத்தத்தில் அவர் பாண்டவர்களுக்கு சாதகமாகச் செயல் படுகிறாரோ என்று சந்தேகப்பட்டு, மனம் அவர்களிடமும் உடல் இங்கேயும் இருக்கிறதோ என்று கோபப்பட்டான். பீஷ்மரும் கோபமடைந்து, இன்று நான் அர்ஜுனனைப் படுத்தும் பாட்டில், ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று சபதம் செய்துள்ள கண்ணனைக் கூட ஆயுதம் எடுக்க வைக்கிறேன் பார், என்றார். அதன்படி கடும் போர் புரிந்து அர்ஜுனனனை மயக்கமடையச் செய்தார். கோபமடைந்த கண்ணன், சக்கரம் ஏந்தி பீஷ்மரை நோக்கிப் பாய்ந்தார். கிருஷ்ண பக்தரான பீஷ்மர், சக்கரத்துடன் வரும் பரமாத்மாவை வணங்கி, தன் தலை கொடுக்க தயாராக நின்றார். அப்போது அர்ஜுனன் கண்விழித்து, கண்ணா! இது தகுமா! ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற சபதத்தை மீறிவிட்டாயே. இது அவமானமல்லவா? என்றான். அர்ஜுனா! எனக்கு வரும் அவமானம் முக்கியமல்ல! என் பக்தனின் உறுதிமொழி காக்கப்பட வேண்டும். பீஷ்மர் துரியோதனனிடம் இன்று என்னை ஆயுதம் எடுக்க வைப்பதாக உறுதியளித்தார். அதைக் காப்பாற்றவே அப்படி செய்தேன், என்றார். பக்தனுக்காக தன்னையே தாழ்த்திக் கொள்ளும் கருணைக் கடல் அவர்.
பகவத்கீதையின் பொருள்: பகவத்கீதையை பகவத் கீதை என்று பிரிப்பர். பகவத் என்றால் கடவுள். கீதை என்பது கீதம். ஆம்..இதற்கு கடவுளின் பாட்டு எனப் பொருள். அர்ஜூனனுக்கு குரு÷க்ஷத்ர களத்தில், தர்மம் தவறி நடந்த தன் உறவினர்களை பாசம் காரணமாகக் கொல்லத் தயங்கிய நேரத்தில், பகவான் கிருஷ்ணர் இனிமையாக இசைத்த ஸ்லோகங்களே பகவத்கீதை. குரு÷க்ஷத்திர களத்தில் அர்ஜுனன் பாசம் என்ற சிக்கலில் விழுந்து தவித்தது போல, இன்று வரை ஒவ்வொரு மனிதனும் மனைவி, குழந்தை, தாய், தந்தை, அக்கா, தம்பி, அண்ணன், நண்பன்...இன்னும் எத்தனையோ உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களையும் அந்த பந்தத்தில் இருந்து விடுவித்து, தாமரை இலை தண்ணீர் போல வாழ வைக்க உதவும் கருத்துக்களைத் தருவது கீதை. இதன் மூலம் மனிதன் துன்பம் நீங்கி இறைவன் மட்டுமே உண்மை என்று உணருகிறான்.
குழந்தையிடம் ஆசி பெறுவோம்: நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன். ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான். கிருஷ்ண ஜெயந்தியான இன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கே வருவார் கண்ணன்.. மகிழ்ச்சியுடன் வரவேற்போம் அவர் அருள் பெறுவோம்! அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!