திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா; காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆவணி மாதம் கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு, உற்சவர் முருகருக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகர், வள்ளி – தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவை ஒட்டி, சில பக்தர்கள் காவடிகள் எடுத்தும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதுதவிர, கிருத்திகை விழா என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டதால், பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் சென்ற பக்தர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், 40க்கும் மேற்பட் ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.