உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருணையே வடிவமான சிவபெருமான்

கருணையே வடிவமான சிவபெருமான்

திருப்பூர்: ‘கருணையே வடிவமான சிவபெருமானை நாளும் தொழுது உய்வு பெற வேண்டும்,’ என, பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.

கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை சார்பில், திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் திருவாசகம் பயிற்சி வகுப்பு வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த வார பயிற்சி வகுப்பில், சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: திருவண்டப்பகுதியில், ‘கண்ணால் யானும் கண்டேன் காண்க’ என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, எந்த தகுதியும் இல்லாத அடியேனும் கண்டேன் என்கிற உருக்கம் இதில் இருக்கிறது. ‘கண்ணால் கண்டேன்’ என்றால், நீ காட்டினாய்; நான் கண்டேன் என்பது பொருள்.

‘எல்லாப் பொழுதும் காண்பாரியார் கண்ணுதலாய்’ என்கிறார் அப்பர் சுவாமிகள். பெருமானே, நீ உனது உருவத்தை எங்களுக்குக் காட்டி மகிழ்விக்கவில்லை என்றால், எங்களுடைய முயற்சியினால் நாங்கள் எவ்வாறு உன்னைப் பார்க்க முடியும் என்கிறார்.

திருப்பெருந்துறையில் எனக்காக நீ வந்து காட்சி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தீட்சை செய்து, உபதேசமும் செய்தாய். அந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, இதற்கு என்னுடைய தகுதி ஏதுமில்லை. முழுக்க முழுக்க உன்னுடைய கருணைதான் இதற்குக் காரணம் என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். ‘கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி’ என்று சேக்கிழார் சுவாமிகள் பாடுகிறார்.

கருணை என்றாலே அது சிவபெருமான்தான். அன்பே சிவம் என்று சொல்வதுபோல், அன்பின் அடித்தளம் பெருமான் நம்மீது கொண்ட கருணைதான். அத்தகைய கருணையே வடிவமாகிய பெருமானை நாம் நாளும் தொழுது உய்வு பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !