தேசியம், தெய்வீகத்திலிருந்து வழுவாமல் பயணிக்கும் தினமலர்: சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆசியுரை
சென்னை: தினமலர் நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் வழங்கியுள்ள ஆசியுரை:
பகவத் கீதையில் ஞானத்தை அடைய விரும்புவர்களுக்கு உரிய குணங்களை, ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்து உள்ளார்.
இக்குணங்களை பற்றி ஆதிசங்கரர் தமது பாஷ்யத்தில், பிறரை ஏமாற்றுதல், எண்ணத்திலும் செயலிலும் முரண்பட்டிருத்தல், பொய் சொல்லுதல் ஆகியவற்றை தவிர்த்தல், எப்போதும் நேர்மையுடன் இருத்தல் என்று விவரிக்கிறார்.
இந்த குணங்கள், மனிதர்கள் அனைவருக்கும் மிகவும் தேவையானவை. அதுபோல, மனித சமுதாயத்திற்கு செய்திகளைத் தெரிவிக்கும் நல்ல பத்திரிகைகளுக்கும், இந்தக் குணங்கள் பொருந்தியிருக்க வேண்டும்.
தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், ஸ்ரீஆதிசங்கரர் உபதேசித்த இந்த குணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தேசியமும் ஆன்மிகமும் கலந்த விஷயங்கள் உள்ளதாக, தினமலர் நாளிதழை நடத்தி வந்தார்.
அதனால் தான், வாழ்க்கையின் பெரும்பயனான பரம்பொருளைப் பற்றிய விஷயங்களையும், அன்றாட வாழ்விற்கு வேண்டிய நடைமுறைச் செய்திகளையும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விஷயங்களையும் தினமலரில் காண முடிகிறது.
அவரது வம்சாவளியினரும், ஊழியர்களும் இந்த நோக்கத்திலிருந்து வழுவாமல், தினமலர் நாளிதழை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க நாளிதழ் இன்று பவள விழாவை கொண்டாடுவது, மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சிருங்கேரி ஜகத்குரு மகா சுவாமிகளிடம் பக்தி சிரத்தை உள்ள தினமலர் பத்திரிகையினர், சிருங்கேரி மடத்தில் நடக்கும் சிறந்த நிகழ்ச்சிகளையும், மகாசுவாமிகளின் விஜய யாத்திரை பற்றிய விஷயங்களையும் சிறப்பாக பிரசுரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் அனுக்கிரஹத்தாலும், எங்கள் குருநாதரின் கிருபையாலும், தினமலர் மக்கள் சேவையில் இன்னும் சிறப்பாக பன்னெடுங்காலம் விளங்கட்டும். நிர்வாகத்தினர், ஊழியர்கள் அனைவருக்கும் நன்மைகள் பல கிடைக்கட்டும் என ஆசிர்வதிக்கிறோம்.
இவ்வாறு ஆசியுரையில் கூறப்பட்டுள்ளது.