உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாஷ் யாத்திரைக்கு புதிய பாதை நேபாளம் வழியாக செல்ல தேவையில்லை

கைலாஷ் யாத்திரைக்கு புதிய பாதை நேபாளம் வழியாக செல்ல தேவையில்லை

கோவை: கைலாஷ் செல்வதற்கு மத்திய அரசு 2 ரோடுகளை போட்டிருப்பதால் நேபாளம் வழியாக செல்ல தேவையில்லை.

நேபாளம் நாட்டின், போட்டேகோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாயமான 5,000 பேரை தேடும் பணி நடக்கிறது. இந்தியாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கைலாஷ் யாத்திரை செல்கிறார்கள். இந்த சம்பவத்தால் யாத்ரீகர்கள் பயப்படும் நிலையில், மத்திய அரசு கைலாஷ் யாத்திரை செல்வதற்கு 2 வழித்தடங்களை உருவாக்கியுள்ளது.

கைலாஷ் யாத்ரீகர், டாக்டர் கார்த்திக் கூறியதாவது:

நான் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றேன். காத்மண்டுவில் இருந்து 150 கி.மீ தொலைவில் ‘சுயாப்ரூபேசி’ என்கிற பகுதி உள்ளது. பஸ்சில் சென்றால் 8 மணி நேரமாகும். ரோடு மிகவும் மோசமாக இருக்கும். பருவமழை காலத்தில் எப்போதும் நிலச்சரிவு ஏற்படும். ‘த்ரிசூலி’ நதியை ஒட்டியே ரோடு செல்லும். அந்த பாதையில் பயணிக்க மிகவும் பயமாக இருக்கும். இந்த வழித்தடத்தில் உள்ள 35 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதை சரி செய்ய 4 ஆண்டுகளாகும். அதுவரை அப்பாதையில் பயணிக்க முடியாது.

நம் மத்திய அரசு, நேபாளம் செல்ல உத்தரகாண்ட், சிக்கிம் வழியாக 2 ரோடுகள் போட்டுள்ளனர். உத்தரகாண்ட் வழியாக செல்ல, பித்ரோகர் வரை விமானத்தில் செல்லலாம். அங்கிருந்து அல்மோரா, லிபுலேக் பாஸ் வழியாக நேரடியாக சீனாவின் டார்ஜன் சென்றுவிடலாம். இந்த ரோட்டின் 90 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இப்பாதை மிகவும் பாதுகாப்பானது. லிபுலேக் பாஸில் இருந்து 100 கி.மீ தொலைவில் மானசரோவர் யாத்திரை சென்றுவிடலாம். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ராணுவம் இந்த பயணத்தை ஒருங்கிணைக்கும். பஞ்ச கைலாஷில் ஒன்றான ஆதி கைலாஷ் இந்த வழியாக உள்ளது. அதையும் நாம் பார்க்கலாம். காத்மண்டு வழியாக செல்லும்போது தகவல் பரிமாற்றம் கடினமாக இருக்கும். இதில் அந்த பிரச்னையும் இல்லை.

நேபாளம் வழியான பயணத்தை தனியார் டூரிஸ்ட் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கிறார்கள். திபெத் நுழைவதற்கு முன்பு நடக்கும் பரிசோதனை கறாராக இருக்கும். உத்தரகாண்ட் வழியாக செல்வதற்கு தனியார் டூரிஸ்ட்கள் தொல்லை இருக்காது. நிம்மதியாக சென்று வரலாம். சிக்கிம் அருகே நதுலா வழியாக மற்றொரு பாதையும் உள்ளது. நேபாளம் வழியாக செல்வதற்கும், உத்தரகாண்ட் வழியாக செல்வதற்கும் ஒரே மாதிரியான காலம் தான் (18 நாட்கள்) எடுக்கும். டில்லியில் வைத்து மருத்துவக்குழு பரிசோதித்து அனுப்புகிறார்கள். தற்போது குறைவான அளவிலேயே பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். வரும் நாட்களில் கூடுதல் பயணிகளை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !