உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து, மாசு ஏற்படாத வகையில் விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், இயற்கை மற்றும் மக்கும் தன்மை கொண்ட களிமண், மண் போன்ற மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது.

சிலைகளை அலங்கரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும். நச்சுத்தன்மை மற்றும் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணங்கள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை தவிர்த்து, நீரால் எளிதில் மக்கும் இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களை சிலைகள் மற்றும் பந்தல் அலங்காரங்களில் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.

முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இடங்களில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த வழிகாட்டுதல்களை, www.tnpcb.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !