திருப்பரங்குன்றம் கோயிலில் மொபைல் போனுக்கு பாதுகாப்பு கட்டணம் ரத்து
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் அலை பேசி பாதுகாப்பிற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டது.
கோயிலில் தமிழக அரசின் உத்தரவுப்படி செப். 1முதல் பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக கோயில் முன்புறமுள்ள பொருள்கள் பாதுகாப்பு அறை, சொக்கநாதர் கோயில் முன்பு அலைபேசி பாதுகாக்க பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது. செப். 1முதல் பக்தர்கள் கைபேசி ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டும், அவர்களது அலைபேசி விவரங்கள் பதிவு செய்யப்பட்டும் ரசீது கொடுக்கப்பட்டது. சுவாமி தரிசனம் முடித்து ரசீதை கொடுத்து அலைபேசியை பக்தர்கள் திரும்ப பெற்றுச் சென்றனர். பக்தர்கள் அவதி: அலைபேசியை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுப்பதற்காக நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஒரு அலைபேசி வழங்கிய பக்தர் ரூ. 5 சில்லறை இல்லாமல் ரூ. 20 அல்லது ரூ.50 கொடுத்தனர். பணியாளர்கள் மீது சில்லறை கொடுக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் அலைபேசியை பாதுகாப்பதற்காக வசூலிக்கப்பட்ட ரூ. 5 கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் கட்டணம் இன்றி அலைபேசிகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்துச் செல்லலாம். முகம் ஸ்கேன் செய்யப்படுவது, அலைபேசி விவரங்கள் பதிவு செய்யப்படுவது, ரசீது வழங்கப்படும் நடைமுறைகள் தொடர்கிறது.