உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானுக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சென்றது ஆண்டாள் சூடிய மாலை

ஏழுமலையானுக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சென்றது ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பதி திருமலை கோயில் புரட்டாசி பிரமோத்ஸவம் ஐந்தாம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கள பொருட்கள் நேற்று திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனை முன்னிட்டு நேற்று காலை 11:15 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு சாற்றி மங்களப் பொருட்கள் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகளை ராஜா பட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு மங்களப் பொருட்களை ஒரு வெள்ளி கூடையில் வைத்து ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் உட்பிரகாரம் சுற்றி வந்து திருப்பதிக்கு காரில் கொண்டு செல்லப்பட்டது. விழாவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம்கோ நிறுவனத்தினர் செய்திருந்தனர். இன்று (செப். 18) காலை திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு திருவீதி சுற்றி வந்து கோயிலில் மாலை, மங்கல பொருட்கள் ஒப்படைக்கப்படுகிறது. இதனை நாளை (செப். 19) காலையில் பெருமாளுக்கும், மாலையில் மலையப்பசாமிக்கும் சாற்றி கருட சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !