உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி கோஷம் முழங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஓம் சக்தி கோஷம் முழங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பல்லடம்: பல்லடம் அருகே, ஓம்சக்தி பராசக்தி கோஷம் முழங்க, ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையத்தில், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது.‌ முன்னதாக, செப்., 14 அன்று இரவு 7,00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹவாசனம், ரச்சோக்ன பூஜை, வாஸ்து பூஜை மற்றும் கிராம சாந்தி ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள், ஆச்சாரியாவரணம், தனபூஜை, ஐஸ்வர்யா குபேர லட்சுமி பூஜை, கணபதி ஹோமம், துர்கா லட்சுமி சரஸ்வதி ஹோமம், ஆகியவை நடந்தன. மாலை, 6.00 மணிக்கு மேல், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை அலங்காரம் ஆகியவற்றை தொடர்ந்து, முதலாம் கால யாக பூஜை துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாகம், கோபுர கலச ஸ்தாபனம், திரவ்யாகுதி, நித்ரா கும்ப பூஜை உள்ளிட்டவை நடந்தன. மாலை 5,00 மணிக்கு, மூன்றாம் காலையாக பூஜையும், இதனையடுத்து, இரவு, 11.00 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் மற்றும் அம்பாள் பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை, நான்காம் காலையாக பூஜையை தொடர்ந்து, காலை, 10.00 மணிக்கு தீர்த்த கலசங்கள் புறப்பட்டன. 10.15 - 10.45 மணிக்கு, மூலவர் சௌடாம்பிகை அம்மனை தொடர்ந்து, விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கோவில் கமிட்டி தலைவர் சொக்கப்பன் மற்றும் நிர்வாகி சக்திவேல் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !