பெருநகர் ஏரியில் 6ம் நுாற்றாண்டு மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பெருநகர் ஏரியில் கி.பி., 6ம் நுாற்றாண்டு பல்லவர்கள் காலத்தை சேர்ந்த மூத்த தேவியின் புடைப்பு சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கண்டெடுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் ஏரியில், வரலாற்று ஆய்வாளரும், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி வரலாறு துறை விரிவுரையாளருமான மதுரைவீரன் மற்றும் முதுகலை மாணவர்கள் தேவகுமார், விக்ரம் ஆகியோர், நேற்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புடைப்பு சிற்பம் ஒன்றை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் மதுரைவீரன் கூறியதாவது: பெருநகர் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மூத்ததேவியின் புடைப்பு சிற்பம், 76 செ.மீ., உயரமும், 90 செ.மீ., அகலமும் கொண்டது. இது, 6வது நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். வளமையின் அடையாளமாகவும், வேளாண் கடவுள் என்று அழைக்கப்படும் தவ்வை என்பவர் கரண்ட மகுடத்தை அணிந்தும், காதுகளில் அழகிய குதம்பை காதணியை அணிந்தும், மார்பில் வீரச்சங்கிலி அணிந்தவாரு உள்ளார். தொண்டை மண்டலத்தில் காணப்படும் தவ்வை சிற்பங்களில், இது அரியதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். மேலும், வலப்பக்கத்தில் மகள் மாந்தியையும், இடப்பக்கத்தில் மகன் மாந்தனையும் கொண்டுள்ளார். காக்கை கொடியையும், இடதுபுறத்தின் கீழ் பகுதியில் ஒரு பணிப்பெண்ணும் உள்ளார். இந்த மூத்ததேவியின் திருவுருவத்தை, அப்பகுதி மக்கள் அலையத்தம்மன் என்ற பெயரில், தற்போதும் வழிபட்டு வருகின்றனர். இந்த தகவலின் உண்மை தன்மையை, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கரும் உறுதி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.