திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணி முதல், 7:00 மணி வரை நித்திய பூஜை, திருப்பாவை சாற்றுமறை நடந்தது. 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளினார். அங்கு 10:00 மணிக்கு மகாதிருமஞ்சனம், அலங்காரம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த நிலையில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மாலை சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் செய்திருந்தார்.